மெடிக்கல் உரிமையாளரை மாமூல் கேட்டு மிரட்டிய நபர் கைது
கூடுவாஞ்சேரி அருகே மெடிக்கல் உரிமையாளரை மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மன்னிவாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருபவர் வினோத். இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலம்பரசன் என்ற ரவுடி பேசிய ஆடியோ வெளியானது.
இதையடுத்து ஓட்டேரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன்,கூடுவாஞ்சேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் 3 தனிபடைகள் அமைத்து சிலம்பரசனை தேடிவந்தனர்.
இந்நிலையில் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் ஆந்திரா மாநிலம் தப்பி செல்ல முயன்ற ரவுடி சிலம்பரசனை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து மூன்று கைபேசி மற்றும் கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சிலம்பரசன் மீது 9 வழக்குகள் உள்ளன. பொழிச்சலூர் பகுதியில் இரும்பு வியாபாரியை மாமூல் கேட்டு மிரட்டியதாக சங்கர்நகர் போலீசாரால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 22ம் தேதிதான் அவர் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறுகையில் “செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ரவுடிகள் இடையூறு செய்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவர் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆகவே பொதுமக்கள் எந்த பிரச்சினை வந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.