கள்ளக்குறிச்சி: சித்தப்பாவை கடத்தி பணம் பறித்த இளைஞர் உட்பட 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி: சித்தப்பாவை கடத்தி பணம் பறித்த இளைஞர் உட்பட 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி: சித்தப்பாவை கடத்தி பணம் பறித்த இளைஞர் உட்பட 6 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக சித்தப்பாவை கூட்டாளிகளுடன் கடத்தி பணம் பறித்த இளைஞர் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்து தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள தியாகதுருகம் மின்வாரிய அலுவலகம் அருகில் வசித்து வரும் முகமது ரியாசுதீன் என்பவருக்கும் அவரது அண்ணன் மகன் நஸ்ருதீனுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கடந்த 6-மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி ரிஸ்வானா என்ற பெண், கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ரியாசுதீனுக்கு சொந்தமான 6 சென்ட் காலி மனையை தான் வாங்கி கொள்வதாகவும் அதற்காக மனையை பார்வையிட விரும்புவதால் நேரில் வருமாறும் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதனை நம்பி கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்த ரியாசுதீன் நேரில் சென்றுள்ளார். அங்கு மனையை பார்வையிட்ட ரிஸ்வானா இடம் தனக்கு பிடித்திருப்பதாகவும் தனது கணவர் சிறிது தொலைவில் உள்ளார். என்னுடன் காரில் வந்தால் அவரிடம் பேசி உடனடியாக முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய ரியாசுதீன் காரில் ஏறியுள்ளார். கார் சிறிது தூரம் சென்றவுடன் ரிஸ்வானா ஓட்டுனரிடம் காரை நிறுத்த சொல்லியுள்ளார்.

அவர்கள் திட்டமிட்டபடி அங்கு நின்றிருந்த மூன்று இளைஞர்கள் காரில் ஏறியுள்ளனர். அந்த இளைஞர்கள் மூன்று பேரும் முகமது ரியாசுதீனை சரமாரியாக அடித்தும் ஆபாசமாக திட்டியும் நாங்கள் உன்னை கடத்தியுள்ளோம்; உன்னை விடுவிக்க ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர். அதற்கு ரியாசுதீன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதும், ரியாசுதீன் சட்டை பாக்கெட்டிலிருந்த ரூ. 4 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை பிடுங்கியவர்கள் ரியாசுதீன் போன் பே மூலம் அவர் வங்கி கணக்கிலிருந்த ரூ. 2 லட்சத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர்.

அடுத்த 4 நாட்களுக்குள் இன்னும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்து கொடுக்க வேண்டும் என மிரட்டி காரிலிருந்து ரியாசுதீனை கீழே இறக்கி விட்டு சென்றுள்ளனர். தன்னை கடத்தி அடித்து மிரட்டிய அதிர்ச்சியிலிருந்து மீளாத ரியாசுதீன் அவர்கள் கூறியபடி கடந்த 4-ஆம் தேதி 2 லட்சம் பணத்துடன் சென்றபோது அவர்கள் பணத்தை நேரில் வாங்க மறுத்து அருகில் உள்ள இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்து விட்டு வாகன பதிவு எண்ணை குறித்துக் கொண்ட ரியாசுதீன் வாகன முகவரி மற்றும் உரிமையாளர் பற்றி விசாரித்தபோது அது நஸ்ரூதினுக்கு சொந்தமானது என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் நஸ்ரூதின் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம், கடத்தலுக்கும், பணம் பறிப்பு சம்பவத்திற்கும் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான ரிஸ்வானாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com