கள்ளக்குறிச்சி: வாகன சோதனையில் சிக்கிய டிராக்டர் திருடன் - 3 டிராக்டர்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் டிராக்டரை திருடிச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த (29-4-2022) ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே டிராக்டரை நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது டிராக்டர் காணமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்த விசாரணை செய்து வந்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆரோக்கியதாஸ், ஏழுமலை, முருகன், மனோகர் மற்றும் போலீசார்கள் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் நீலமங்கலம் மேம்பாலம் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கி வந்த இரண்டு டிராக்டர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, டிராக்டர் ஓட்டி வந்த நபர், டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து மற்றொரு டிராக்டர் ஓட்டுனரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சங்கராபுரம் தாலுகா சித்தமலை கிராமத்தைச் சேர்ந்த சிங்காரன் என்பவரின் மகன் பரத் (23) என்பது தெரியவந்தது. இவரும் தப்பி ஓடியவரும் உலகங்காத்தான் வெங்கடேஷ் என்பவரின் டிராக்டர் மற்றும் மலைக்கோட்டாலம், நெடுமானூர் கிராமத்தி திருடு போன 3 டிராக்டர் திருடியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீசார், பரத் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 டிராக்டர்களை பறிமுதல் செயது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்