"உடலை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பொய்யானவை”-கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பேட்டி
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்த நிகழ்வு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், `மாணவி உடல் தூக்கி செல்லப்படும் காட்சி’ என்று ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியது. இந்த சிசிடிவி-யில் வெளியான காட்சிகள் பொய்யானவை என்று அவரது தாய் செல்வி விளக்கம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த கடலூர் கனியாமூர் பகுதியைச் சேர்ந்த மாணவி கடந்த மாதம் 13 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில், பல்வேறு ஐயங்களை எழுப்பிய அவரது தாயார் தொடர்ந்து போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ஆம் தேதி பள்ளியின் முன் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பெரும் சேதங்களை விளைவித்தது. இதனைத்தொடர்ந்து மாணவி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி காவல் துறையும், கலவரம் குறித்து சிறப்பு பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் மரணம் குறித்த பல்வேறு ஊகங்களும் பரப்பப்படுகிறது. இதற்கிடையே மாணவி தொடர்பான 3 சி.சி.டி.வி காட்சிப் பதிவுகள் வெளியாகின. மாணவி இறப்பதற்கு முதல் நாள் இரவு வகுப்பறைக்கு வருவது, மாடிக்கு செல்வது போன்ற இந்தக் காட்சிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை தரப்பில் எந்த கருத்துகளும் சொல்லப்படாத நிலையில், அந்த காட்சிகள் குறித்தும் ஊகங்களும் கருத்துகளும் பரவி வந்தன. இந்த நிலையில் தற்போது மாணவியை 4 பேர் தூக்கி செல்வது போன்ற சி.சி.டி.வி. காட்சிகள் நேற்று வெளியாகியது
தற்போதைக்கு இவ்வழக்கில் மாணவியின் இரண்டாவது உடல் கூராய்வு அறிக்கை ஜிப்மர் மருத்துவமனை குழுவினரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்தும், அவ்வப்போது காட்சிப் பதிவுகள் மட்டும் வெளியாகி வருகின்றன. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று வெளியான சிசிடிவி காட்சிகள் பொய்யானவை என்று அவரது தாய் செல்வி தெரிவித்துள்ளார். `இதுபோன்ற சிசிடிவி காட்சிகளை யார் வெளியிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. இது ஒரு அப்பட்டமான பொய்யான சிசிடிவி பதிவு’ என்று அவர் தெரிவித்துள்ளார்.