கள்ளக்குறிச்சி வன்முறையின் போது பள்ளியின் ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய நபர் கைது!

கள்ளக்குறிச்சி வன்முறையின் போது பள்ளியின் ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய நபர் கைது!
கள்ளக்குறிச்சி வன்முறையின் போது பள்ளியின் ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய நபர் கைது!
Published on

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஆதாரத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவமும் அந்த இறப்பு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததும் தமிழ்நாட்டையே உலுக்கியது. மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக தனி வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வன்முறைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்ற மாணவியின் தாய் அப்பொழுதே தெரிவித்துவிட்டார். பள்ளி நிர்வாகத்தின் மீதும் வன்முறை தொடர்பாக அவர் குற்றம்சாட்டினார். அதேபோல், வன்முறைக்கு மாணவியின் தாயாரும் காரணம் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே, முக்கியமான கேள்வி ஒன்று அப்பொழுது முன் வைக்கப்பட்டது. மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் எப்படி வன்முறை வெடித்தது. இத்தனை வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்த முடிந்தது என்றால் இது திட்டமிட்ட கலவரமா? என பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் மிக முக்கியமாக பள்ளியில் இருந்த மாணவர்களின் ஆவணங்கள் கொளுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு போராடியவர்கள் எப்படி மாணவர்களின் ஆவணங்களை தீயிட்டு கொளுத்துவார்கள் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. 

இந்நிலையில்தான், ஆவணங்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற வீடியோ மூலம் சிக்கிய நபரை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.  ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த லட்சாதிபதி என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுவரை 323 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீயிட்டு கொளுத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் லட்சாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com