கள்ளக்குறிச்சி: 5 பேரை கொல்ல முயற்சி... தானும் விபரீத முடிவெடுக்க நினைத்த அர்ச்சகர்; என்ன நடந்தது?
தங்களை கெட்ட நேரம் சுற்றி சுற்றி அடிப்பதாக நினைத்து குறிகேட்கச் செல்பவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு பரிகாரம் சொல்லும் அர்ச்சகருக்கே கெட்ட நேரம் வந்தால் என்னவாகும்... அதுபோன்ற ஒருசம்பவம்தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் அரங்கேறியுள்ளது.
கோயில் அர்ச்சகர் எனச் சொல்லப்படும் முரளி, கணேசன் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். மேலும் கணேசனிடம் அனுமதி பெற்று அவரது வீட்டின் அருகிலேயே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஒன்றையும் முரளி நிறுவியுள்ளார்.
முரளிக்கு கணேசனின் தம்பி மகன் ராமமூர்த்தி உதவியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். 15 வருடங்களுக்கு மேலாக முரளி குறி சொல்லி வருகிறார். இதனிடையே கோவில் திருவிழா நடத்துவதற்காக பல்வேறு கிராமங்களில் கடன் பெற்ற முரளி அதனை திரும்பி கொடுக்க முடியாமல் சிக்கலில் சிக்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் முரளியை தொந்தரவு செய்ய ஆரம்பித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆனால், அதற்கு பின் முரளி செய்து காரியம்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கோயிலை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த சுத்திகரிப்பான் திரவியத்தை தண்ணீரில் கலந்து தீர்த்தம் என கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளார். அதேபோல் அவரது உதவியாளர் ராமமூர்த்திக்கு அதனை கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தியுள்ளார். இதனையடுத்து ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேரிடமும் காவல்துறை விசாரித்து வருகின்றனர். அர்ச்சகர் முரளி ஐந்து பேருக்கும் விஷம் கலந்து தீர்த்தத்தை கொடுத்து கொலை செய்ய முயற்சித்தது ஏன்? கடனுக்கும் கணேசன் குடும்பத்தினருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.