ஹைதராபாத்: கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலிலிருந்து காணாமல்போன நகைகள்!!
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்துபோன பெண்ணிடமிருந்து, அவருடைய மூக்குத்தி, காதணிகள், மோதிரம், செயின் போன்ற வைரம் பதித்த நகைகள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்துபோன பெண்ணின் உடலிலிருந்து தங்க நகைகள் காணாமல் போனதாக பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நகைகளின் மொத்த மதிப்பு ஐந்து இலட்சம் ஆகும். இறந்துபோனவரின் மகன் பிரகாஷிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து தன் தாயின் உடலை தங்களிடம் கொடுத்தபோதே நகைகளை காணவில்லை என்று பிரகாஷ் கூறினார். ஆனால் சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பே நோயாளியின் நகைகள் அனைத்தும் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகி தெரிவித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையின் விசாரணை நடப்பதாகவும், இருதரப்பிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.