குறைந்த விலைக்கு இரும்புப் பொருட்களை தருவதாக 15.20 கோடி மோசடி: தந்தை, மகன் கைது

குறைந்த விலைக்கு இரும்புப் பொருட்களை தருவதாக 15.20 கோடி மோசடி: தந்தை, மகன் கைது

குறைந்த விலைக்கு இரும்புப் பொருட்களை தருவதாக 15.20 கோடி மோசடி: தந்தை, மகன் கைது
Published on

இரும்புப் பொருட்களை குறைந்த விலையில் விநியோகம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி சுமார் 15 கோடியே 20 லட்சம் ரூபாயை மோசடி செய்த தந்தை - மகனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிராம் சர்மா. இவர் Radha Industries Pvt Ltd என்ற பெயரில் பல்வேறு இரும்பு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நிறுவனத்திற்கு வந்த ரித்தேஷ் ராய் என்பவர் குறைந்த விலைக்கு இரும்பு விநியோகம் செய்து தருவதாக கூறி ஒப்பந்தம் பேசியுள்ளார்.

அவர் பேசிய வார்த்தையில் மயங்கிய மணிராம் சர்மா குறைந்த விலைக்கு இரும்பை வாங்குவதால் லாபம் இரட்டிப்பாகும் என்ற எண்ணத்தில் ரித்தேஷ் ராய் கூறிய ஒப்பந்தத்திற்கு சம்மதித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வருமான வரியை காரணம் காட்டி கொடுக்கவுள்ள பணத்தை தனது பெயரிலும், தனது தந்தை ராஜீவ் ராய் பெயரிலும் உள்ள RKKR Steels Pvt Ltd, RKKR Holding Pvt Ltd, Shantananda Steels Pvt Ltd மற்றும் Varun Exim Pvt Ltd ஆகிய 4 நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.

அதனை ஒப்புக்கொண்ட மணிராம் சர்மா, அவர்கள் கொடுத்த 4 வங்கிக் கணக்கிலும் தான் கேட்ட இரும்புக்கான விலையாக 15 கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்து 588 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து மணிராம் சர்மாவின் நிறுவனத்திற்கு ரித்தேஷ் ராய் ஒப்பந்தமிட்டபடி இரும்பை அனுப்பாமல் இருந்து வந்ததால், அவர்களைத் தொடர்புகொண்ட மணிராம் சர்மா இரும்பை அனுப்புமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னரும் ரித்தேஷிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் கொடுத்த பணத்தை மணிராம் சர்மா திருப்பிக் கேட்டுள்ளார். அதன் பின்னர் ரித்தேஷின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மணிராம் சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மணிராம் சர்மாவிடம் மோசடியில் ஈடுபட்ட ரித்தேஷ் ராய் மற்றும் ராஜீவ் ராய் ஆகியோர் மீது ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்புப் பிரிவில் வழக்கு நிலுவையில் இருப்பதும், அந்த வழக்கில் சிக்காமல் அவ்விருவரும் தலைமறைவாக இருந்து வருவதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்திய தனிப்படை போலீசார் அவர்களின் செல்போன் எண்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் அவர்கள் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் ரித்தேஷ் ராய் மற்றும் அவரது தந்தை ராஜீவ் ராய் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com