போலீசாரின் செல்போன் சிக்னலை வைத்தே எஸ்கேப்... மூவர் கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

போலீசாரின் செல்போன் சிக்னலை வைத்தே எஸ்கேப்... மூவர் கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்
போலீசாரின் செல்போன் சிக்னலை வைத்தே எஸ்கேப்... மூவர் கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பிடிக்க வரும் தனிப்படை போலீசாரின் செல்போன் சிக்னல் வருவதை கண்டறிந்து 3 பேரும் தப்பித்தது எப்படி? பின்னர் எப்படி சிக்கினார்கள்?... 

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பைனான்ஸ் நிறுவன அதிபர் தலில் சந்த். அவரது மனைவி புஷ்பா பாய், அவரது மகன் ஷீத்தல் ஆகியோர் கடந்த 11ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். யானைகவுனி போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம் சற்று பாதிக்கப்பட்ட ஷீத்தலிடம் இருந்து பிரிந்து ஜெயமாலாவும், இரண்டு மகள்களும் புனேயில் வசித்து வருகின்றனர் என்பதும், தங்களது சகோதரி ஜெயமாலாவுக்கு ஜீவனாம்சமாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தர வேண்டும் என ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், வழக்கறிஞர் விலாஷ் ஆகியோர் பல முறை ஷீத்தலின் தந்தையிடம் கேட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

பல முறை கேட்டும் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், வழக்கறிஞர் விலாஷ் தலைமையில் வந்த கும்பல் 3 பேரை சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது. போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கினர்.

சிசிடிவியை ஆய்வு செய்தபோது, 3 கொலைகளை அரங்கேற்றிவிட்டு 6 பேர், கார் ஒன்றின் மூலமாகவும், இருசக்கர வாகனம் மூலமாகவும் காஞ்சிபுரம் காட்டூரில் கைலாஷ் வசிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்கிருந்து இரண்டு கார்கள் மூலமாக தலா 3 பேர் என தப்பி சென்றனர். ஆனால் முதலில் உத்தரபிரதேச மாநில எண் கொண்ட காரில்தான் அனைவரும் தப்பி செல்கிறார்கள் என நினைத்து போலீசார் சிசிடிவி மூலமாக கண்காணித்தனர்.

இதனையடுத்து கர்நாடகா, தெலங்கானா போலீசார் மூலமாக சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் புனே செல்வது போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து விமானம் மூலம் மூன்று தனிப்படை புனேவிற்கு சென்று காத்திருந்தது. அப்போது சோலாப்பூரில் கார் வருவதை கண்டறிந்து சினிமா பாணியில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அனைவரையும் பிடித்துவிட்டதாக நினைத்து காரில் பார்க்கும்போது, அதில் கைலாஷ், ரவீந்தர நாத்கர், விஜய் உத்தம் கமல் ஆகியோர் மட்டுமே இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் 3 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மீதமுள்ள ஜெயமாலா, விலாஷ் மற்றும் ராஜூ சிண்டே ஆகியோர் எங்கே தப்பிச் சென்றார்கள் என போலீசார் தேடி வந்தனர். சிசிடிவியை ஆய்வு செய்தபோது மற்றொரு காரில் தனியாக 3 பேர் தப்பிச் செல்வதை போலீசார் முதற்கட்ட விசாரணையில் கவனிக்காமல் இருந்ததை அறிந்தனர்.

முதலில் கைலாஷ், ரவீந்தரநாத்கர், விஜய் உத்தம் கமல் ஆகிய 3 பேர் கைதானதிலிருந்து ஜெயமாலா, விலாஷ், ராஜூ சிண்டே ஆகிய மூவரும் போலீசாரிடம் சிக்கக் கூடாது என உஷாராக இருந்துள்ளனர். மற்றொரு காரை பின்தொடர்ந்து தனிப்படை போலீசார் மீதமுள்ள 3 பேரை பிடிக்க சென்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து சென்ற போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போலீசாரிடம் சிக்க கூடாது என்பதற்காக மகாராஷ்டிராவில் நண்பர் உதவியோடு, மற்றொரு புதிய காரில் ஜெயமாலா, விலாஷ், ராஜூ சிண்டே தப்பியது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் செல்போன் எண்களை வைத்து போலீசார் தேட ஆரம்பித்தனர். அவர்கள் உறவினர், நண்பர்கள் என 10 பேரை பிடித்து விசாரணை செய்தனர். குறிப்பாக அவர்களது செல்போனை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் செல்போன் சிக்னல் வைத்து தேடி செல்லும் இடத்திலிருந்து தொடர்ந்து 3 பேரும் தப்பித்து சென்றனர். சைபர் கிரைம் போலீசார் கண்காணிப்பில் இருக்கும் விலாஷின் நண்பர் எண்ணுக்கு புதிய எண்களில் இருந்து கால்கள் வந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர், அந்த செல்போன் எண்களின் சிக்னல் வைத்து தேடி செல்லும்போது மத்திய பிரதேசத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று தனிப்படை போலீசார் மூன்று பேரை பிடிக்க முயன்றுள்ளனர். அங்கிருந்தும் 3 பேரும் தப்பி சென்றுள்ளனர்.


இதனையடுத்து அவர்கள் புதிய புதிய செல்போன் எண்கள் வாங்கியது யாரிடம் என விசாரணை செய்தபோது, விலாஷின் நண்பர் மூலம் பல சிம்கார்டுகள் மற்றும் சாதரண செல்போன்கள் வாங்கியதை போலீசார் கண்டுபிடித்தனர். இருப்பினும் உடனடியாக செல்போன் மற்றும் சிம்கார்டுகள் கொடுத்த விலாஷ் நண்பரை கைது செய்யாமல், தொடர்ந்து புதிய செல்போன் எண்களை ஆக்டிவேட் செய்வதை போலீசார் கண்கானித்து வந்தனர்.

அதை வைத்து புதிய செல்போன் எண்ணை விலாஷ் பயன்படுத்தும்போது, சிக்னல் மூலம் தனிப்படை போலீசார், குஜராத்தில் ஜெயாமாலா, விலாஷ், ராஜூ சிண்டே இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்தும் 3 பேர் தப்பி சென்றதால் தனிப்படை போலீசார் விரக்தியடைந்தனர். இதன் பின் உஷாரான போலீசார் தங்கள் நகர்வையும், பிடிக்க வருவதையும் முன்கூட்டியே அறிந்து 3 பேரும் தப்பி செல்கிறார்கள் என அறிந்தனர்.

மீண்டும் புதிய எண்ணில் இருந்து விலாஷ், நண்பருக்கு கால் செய்துள்ளார். அப்போது எங்கிருந்து பேசுகிறார் என போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கண்டுபிடித்ததில், டெல்லி ஆக்ராவில் தங்கும் விடுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஆக்ரா போலீசாருக்கு வாட்ஸ்அப் கால் மூலம் பேசி, ஜெயமாலா, விலாஷ், ராஜூ சிண்டே போட்டோக்களை அனுப்பி போலீசார் கைது செய்யுமாறு கோரியுள்ளனர். சென்னை தனிப்படை போலீசார் குஜராத்தில் தான் இருப்பதாக நம்பி ஆக்ரா விடுதியில் தங்கிய ஜெயமாலா, விலாஷ், ராஜூ சிண்டே ஆகிய 3 பேரையும் ஆக்ரா போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பின் விசாரணை செய்த போது தான் வழக்கறிஞர் என்பதால் போலீசார் எவ்வாறெல்லாம் குற்றவாளிகளை தேடுவார்கள் என அறிந்து விலாஷ் தப்பித்தது தெரியவந்தது.

அதிலும் குறிப்பாக தங்களை தேடும் தனிப்படை போலீசாரின் எண்ணை கண்டுபிடித்து, அவர்கள் எங்கு செல்கிறார்கள் என நண்பர்கள் மூலம் சிக்னல்களை வைத்து கண்காணித்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் போலீசார் தேடிச்செல்லும் போதெல்லாம் பிடிக்க வருவதை அறிந்து தப்பி சென்றது தனிப்படை போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போன் சிக்னல் வைத்து தேடும் போலீசாரை, அதே செல்போன் சிக்னல் வைத்து நண்பர் உதவியுடன் விலாஷ், ஜெயமாலா, ராஜூ சிண்டே தப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்து பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 5 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஆக்ரா போலீசார் தெரிவித்தனர். சென்னை தனிப்படை போலீசார் பிடிபட்ட 3 பேரையும் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று நாளை (21ம் தேதி) சென்னை அழைத்து வருவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

- சுப்ரமணியன் (செய்தியாளர்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com