
பத்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாக வடபழனி காவல் ஆய்வாளர்மீது வடபழனி புத்தூர் கட்டு மருத்துவமனை உரிமையாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் புத்தூர் கட்டு போர்ன் ஜாயிண்ட் சென்டர் என்ற மருத்துவமனையை நடத்தி வருபவர் சிவசாமி வேலுமணி. தினமும் நூற்றுக்கணக்கான எலும்பு முறிவு தொடர்பான நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவரது நிறுவனத்தின் மீது கார்த்திக் என்ற நபர் வடபழனி காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வடபழனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 12ஆம் தேதி வடபழனி காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் திருமலை என்பவர் மருத்துவமனைக்குச் சென்று காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு 10 லட்ச ரூபாய் கொடுக்கச் சொன்னார் என மருத்துவரை மிரட்டியுள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை நான் எதற்கு பத்து லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என சிவசாமி வேலுமணி கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த ஆய்வாளரின் ஓட்டுநர் காவலர் திருமலை ஆனந்தபாபுவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிவசாமி வேலுமணியிடம் பேச வைத்துள்ளார்.
அக்டோபர் 13ஆம் தேதி மருத்துவமனையில் சிவசாமி வேலுமணியை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் திருமலையிடம் கொடுத்துள்ளார். மேலும் உடனடியாக 9.5 லட்சம் கொடுக்க வேண்டும் என காவல் ஆய்வாளர் ஆனந்த பாபு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவசாமி வேலுமணி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், வடபழனி காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், ஐம்பதாயிரம் ரூபாயை தன்னிடம் பறித்த சிசிடிவி காட்சிகள் ஆதாரம் உள்ளது என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குற்றம் நிரூபணமானதை அடுத்து, வடபழனி உதவி ஆய்வாளர் திருமலையை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மருத்துவர் சிவசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.