பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘தவறாக தண்டிக்கப்பட்ட நபர்’ - 20 ஆண்டுகள் சிறை அனுபவித்த கொடுமை

பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘தவறாக தண்டிக்கப்பட்ட நபர்’ - 20 ஆண்டுகள் சிறை அனுபவித்த கொடுமை
பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘தவறாக தண்டிக்கப்பட்ட நபர்’ - 20 ஆண்டுகள் சிறை அனுபவித்த கொடுமை

பாலியல் வன்கொடுமை வழக்கில்தவறாக தண்டிக்கப்பட்டஉத்தரபிரதேச மாநிலம் லலித்பூரைச் சேர்ந்த விஷ்ணு திவாரி என்ற 43 வயது நபர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஐபிசி மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட விஷ்ணு திவாரி, கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த காலகட்டத்தில், அவரது பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் இறந்தனர், ஆனால் அவர்களின் இறுதி சடங்குகளில் கூட அவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இறுதியாக புதன்கிழமை அவரை விடுவிப்பதாக அறிவித்தது.

லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பட்டியலினப் பெண், 2000 ஆம் ஆண்டு செப்டம்பரில், அப்போது 23 வயதான விஷ்ணு திவாரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிசியின் 376, 506 மற்றும் எஸ்.சி / எஸ்.டி சட்டத்தின் 3 (1) (xii), 3 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் விஷ்ணு திவாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை அப்போதைய நர்ஹத் வட்ட அலுவலர் அகிலேஷ் நாராயண் சிங் விசாரித்தார், அவர் விஷ்ணுவுக்கு எதிராக தனது அறிக்கையை சமர்ப்பித்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அவர் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார்.

2005 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில், அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விஷ்ணு மேல்முறையீடு செய்தார், ஆனால் இந்த வழக்கு 16 ஆண்டுகளாக விசாரித்து, தீர்ப்பளிக்கப்படாமல் இருந்தது. பின்னர், மாநில சட்ட சேவை ஆணையம் வழக்கறிஞர் ஸ்வேதா சிங் ராணாவை விஷ்ணு திவாரியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தது. இதன்பின் நீதிபதிகள் கவுசல் ஜெயேந்திர தாக்கர் மற்றும் கவுதம் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவில் கூறியதாவது “ “குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாளிலிருந்து, மூன்று நாட்களுக்கு பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணின் அந்தரங்க பகுதிகளில் எந்த காயமும் இருந்ததாக சொல்லப்படவில்லை.

முக்கியமாக இந்த வழக்கை அந்த பெண் பதிவு செய்யவில்லை, அவரின் கணவரும், மாமனாரும் பதிவுசெய்திருக்கிறார்கள். எனவே பதிவில் உள்ள உண்மைகள் மற்றும் ஆதாரங்களை கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர் தவறாக தண்டிக்கப்பட்டார் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், தவறாக அளிக்கப்பட்ட உத்தரவும் மாற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக விடுவிக்கப்படுவார்என தெரிவித்தனர்.

விஷ்ணுவின் உறவினரான சத்யேந்திர செய்தியாளர்களிடம், “எனது மாமாவுக்கு கிடைத்த தவறான தண்டனை எங்கள் முழு குடும்பத்தையும், நிதி மற்றும் சமூக ரீதியாக சிதைத்துவிட்டது. அதிர்ச்சி மற்றும் சமூக களங்கம் காரணமாக என் தந்தை, மாமா மற்றும் தாத்தா பாட்டிகளை இழந்தேன். எங்கள் குடும்ப நிலத்தின் பெரும்பகுதியை இந்த வழக்கிற்காக விற்க வேண்டியிருந்தது. என் மாமா விஷ்ணுவைப் பொருத்தவரை, எந்த தவறும் செய்யாமலேயே, அவர் தனது வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளை சிறையில் கழித்ததால் அவரது முழு வாழ்க்கையும் அழிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com