மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பிறந்து 15 நாட்களை ஆன பச்சிளம் குழந்தையை திருடி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த மணிமேகலை எனும் பெண், பிரசவத்திற்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, அவருடன் இரண்டரை வயது மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் தான் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு ஒரு வேலை வாங்கி தரும்படியும், எழும்பூர் மருத்துவமனையில் பணிபுரியும் சுமித்ரா எனும் காவலாளியிடம் உதவி கேட்டுள்ளார். உதவி செய்ய ஒப்புக்கொண்ட சுமித்ரா, வேறொரு பெண்ணை மணிமேகலைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் வேலை கிடைக்கும் என்று இரண்டு பெண்கள் மணிமேகலையை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.
மணிமேகலையின் உடல் பரிசோதனையின் போது, 15 நாள் குழந்தையை இரண்டு பெண்களும் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மணிமேகலையின் இரண்டு வயது மகள் பரிசோதனையின் போது உடன் இருந்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகள் கொண்டு குழந்தைகளை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.