காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் திருப்போரூர் கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் அரசு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், இதனால் அதிகாலையிலேயே பலர் குடித்துவிட்டு வீதிகளில் அட்டுழியங்களில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் புகார்கள் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் பொதுமக்கள் டாஸ்மாக் மண்டல மேலாளர் முத்துசாமிக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் அவர் குழுவினருடன் இன்று காலை கேளம்பாக்கம் திருப்போரூர், திருக்கழுகுன்றம் போன்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்பிலான அரசு மதுபானங்களை பறிமுதல் செய்தார். பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திருக்கழுகுன்றம் கலால் போலீசார் கேளம்பாக்கத்தை சேர்ந்த மலைசாமி என்பவரையும் திருப்போரூரை சேர்ந்த கண்ணன் மற்றும் திருக்கழுகுன்றதைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்