மனைவியை கொன்று வீட்டுக்குள் புதைத்துவிட்டு சார்ஜாவில் இருந்து கேரளா திரும்பிய கணவன்!
மனைவியை கொன்று வீட்டுக்குள் புதைத்துவிட்டு கேரளாவுக்குத் தப்பிய கணவனை சார்ஜா போலீசார் தேடி வருகின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏராளமான இந்தியர்கள் வேலை பார்த்துவருகின்றனர். கேரளாவில் இருந்து அதிகமானவர்கள் அங்கு வசிக்கின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது சகோதரியை தேடி சார்ஜாவுக்கு வந்தார். சகோதரியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவில் ’வாடகைக்காக’ என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், சார்ஜா போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், ‘சார்ஜாவில் வசிக்கும் எனது சகோதரியிடம் கேரளாவில் இருந்து தினமும் போனில் பேசுவோம். வழக்கம்போல கடந்த சில நாட்களுக்கு முன் அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் போன் ரீச் ஆகவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் பலனில்லை. அவளது கணவரும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து சார்ஜாவில் அவர் தங்கியிருந்த வீட்டைப் போய் பார்த்தேன். வீடு பூட்டிக் கிடந்தது’ என்று கூறி யிருந்தார்.
இதையடுத்து சார்ஜா போலீசார், அதிரடி ஆக்ஷனில் இறங்கினர். வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஓர் இடத்தில், தரை யில் சில டைல்ஸ்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. சந்தேகமடைந்த அவர்கள், மோப்ப நாயை அழைத்து வந்தனர். நாய் அந்த இடத்தைக் கண்டதும் காலால் குழி பறித்தது. அதைத் தோண்டி பார்த்தபோது ஒரு பெண்ணின் அழுகிய உடல் கிடைத்தது. அதை மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அது தனது சகோதரியின் உடல்தான் என அடையாளம் காட்டினார் புகார் கொடுத்த இளைஞர்.
இதுபற்றி சார்ஜா போலீசார் கூறும்போது, ‘கொல்லப்பட்ட 36 வயது பெண்ணின் கணவருக்கு இன்னொரு மனைவியும் இருந்துள்ளார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எல்லோரும் ஓரே வீட்டில்தான் வசித்துள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக 36 வயது மனைவியை கொல்ல முடிவு செய்தார் கணவர். இதனால் தனது மற்றொரு மனைவியையும் குழந்தைகளையும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இந்த மனைவியை கொன்று வீட்டுக்குள் புதைத்துவிட்டு, ’வீடு வாடகைக்கு’ என்று கதவில் ஒட்டிவிட்டு அவரும் கேரளாவுக்குச் சென்றுவிட்டார். அவரது கருவிழி மற்றும் விரல் ரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளோம்’ என்றார்.
இந்தச் சம்பவம் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.