விழுப்புரம் பாமக நிர்வாகி படுகொலை: உறவினர்களே கொலை செய்தது அம்பலம்! பகீர் வாக்குமூலம்
கப்பியாம்புலியூர் அருகே இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் விழுப்புரம் பாமக மாவட்ட துணை தலைவர் ஆதித்யன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பயாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த பாமக நிர்வாகி (மாவட்ட துணைத்தலைவர்) ஆதித்யன் கடந்த 24 ஆம் தேதி இரவு பனையபுரத்தில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பலொன்று அவரை வழி மறித்து வெட்டி கொலை செய்தது.
இது தொடர்பாக விக்கிரவாண்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடிவந்தனர். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களுக்கும் இவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் முன்விரோதம் காரணமாக ஆதித்யனின் உறவினர்களே அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
அதன்பேரில் அதே ஊரைச் சேர்ந்த ஆதித்யனின் பங்காளிகள் மற்றும் அவரின் உறவினர்கள் என ஏழு பேரை கைது செய்துள்ளனர். ராமு, லட்சுமி நாராயணன், வினோத், விஷ்ணு, தேவநாதன், ராகவன் மதன் ஆகிய அந்த ஏழு பேரும், விசாரணையின்போது குற்றத்தை ஒத்துக்கொண்டனர். குற்ற சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் இவர்களுக்கும் ஆதித்யனுக்குமிடையே 2011 ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதும், அதனை அடுத்து 2017 ஆண்டில் ஏரியில் மண்ணெடுப்பதில் மீண்டும் இவர்களுக்குள்ளே மோதல் ஏற்பட்டதும் தெரியவந்திருக்கிறது. இக்காரணங்களால் ஏற்பட்ட முன் விரோதங்களால், மூன்று நாட்களாக அவர கொலை செய்ய திட்டம் தீட்டி, பின் ஏழு பேரும் சேர்ந்து வழிமறித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. அனைவரும் இதுபற்றி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து, ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.