ம.பியில் தவறான உடலை எடுக்கச் சொன்ன மருத்துவர் பணியிடை நீக்கம்
மத்திய பிரதேசத்தில் உள்ள சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஒரு இளைஞர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான உடல்வலி ஏற்படவே அவரை மருத்துவமனைக்குள்ளான கோவிட் மையத்திற்கு அனுப்பினர். அதற்குபிறகு குடும்பத்தினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9ஆம் தேதி நோய்வாய்ப்பட்ட இளைஞரின் நிலையைப் பற்றி விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சவக்கிடங்கிலிருந்து அடையாளம் பார்த்து உடலை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். உடலைத் திறந்து பார்த்தபோது அது ஒரு 65 வயதான நபரின் உடல் என கண்டறியப்பட்டது. ஆனால் அதில் அந்த இளைஞருடைய பெயர் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த குடும்ப உறுப்பினர்கள் கோபமடைந்தனர்.
இதனையடுத்து கமிஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் மருத்துவர்கள் அலட்சியம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதுவரை தனது மகனின் கொரோனா சோதனை முடிவை வழங்கவில்லை என்றும், தனது மகனின் உடலை நகராட்சி ஊழியர்கள் எரித்துவிட்டதாகவும் ராம்விஷால் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், டாக்டர் ராகேஷ் படேல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.