என்ஐஏ அதிகாரிகள்போல் நடித்து ரூ.2 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உள்பட 6 பேருக்கு போலீஸ் காவல்

என்ஐஏ அதிகாரிகள்போல் நடித்து ரூ.2 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உள்பட 6 பேருக்கு போலீஸ் காவல்
என்ஐஏ அதிகாரிகள்போல் நடித்து ரூ.2 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உள்பட 6 பேருக்கு போலீஸ் காவல்

சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எனக் கூறி 2 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், பா.ஜ.க. நிர்வாகி உட்பட 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் போலீசாருக்கு 6 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.

சென்னை பிராட்வேயில் உள்ள மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஜமால். இவர் சென்னை பர்மா பஜாரில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மலையப்பன் தெருவில் உள்ள ஜமாலின் வீட்டிற்கு நான்கு பேர் கொண்ட கும்பல் சென்று, தங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்றும், தங்களது வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனவும் கூறி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த 10 லட்ச ரூபாய் பறித்துச் சென்றதாக சொல்லப்பட்டது.

அதேபோல் கடையிலும் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி கடையில் இருந்த 10 லட்ச ரூபாயும் பறித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து சந்தேகம் அடைந்த அப்துல் ஜமால் விசாரணை செய்ததில் வந்த நபர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்ததால், இதுதொடர்பாக சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்துல் ஜமாலின் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களை கொண்டு விசாரணை நடத்தினார்கள்.

கண்காணிப்பு கேமராவில் ஜமால் வீட்டுக்கு வந்த நபர்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தது பதிவாகியிருந்த நிலையில், கொள்ளை அடித்த நபர்கள் யார் என்பதும், அப்துல் ஜமாலுக்கு தெரிந்த நபர்களா என்பது குறித்தும் பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை முத்தியால் பேட்டை போலீசார் சல்லடைப் போட்டு தேடிவந்த நிலையில், இந்த விவகாரத்தில், ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பாயாக பணியாற்றி வரும் புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலைப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அதேப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராகன தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் முன்தினம் மாலை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் கொள்ளையர்கள் முதலில் 20 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றதாக தகவல் வெளியானநிலையில், 2 கோடி ரூபாய் கொள்ளைப் போனதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்ற காவலில் இருந்த 6 பேரிடமும், விசாரணை செய்ய, முத்தியால் பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றதில் அவர்களிடம் 6 நாள் விசாரித்துக்கொள்ள சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கொள்ளையர்களிடம் இருந்து 1 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com