"5 லட்சம் ரூபாய்க்கு 200 தங்க காயின் தருகிறோம்" - வசமாக சிக்கிய கர்நாடக மோசடி இளைஞர்!
ஆலங்குடியைச் சேர்ந்தவரிடம் தங்க காயின் மோசடியில் ஈடுபட முயன்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அயூப்கான். பர்னிச்சர் கடை நடத்தி வரும் இவரது அலைபேசிக்கு மர்ம நபர், குறைந்த பணத்திற்கு அதிக தங்க காயின் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், பேசும் நபர் மோசடி கும்பலைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட அயூப்கான் தொடர்ந்து அந்த இளைஞரிடம் எவ்வளவு பணத்திற்கு எவ்வளவு தங்க காயின் தருவீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு 5 லட்சம் ரூபாய்க்கு 200 தங்க காயின் தருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆலங்குடிக்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்டு தங்க காயினை தருமாறு அயூப்கான் அந்த நபரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆலங்குடிக்கு வந்த ஒரு இளைஞர் 20 தங்க காயின்களை அயூப்கானிடம் கொடுத்துள்ளார். அதனை அவர் வாங்கி பார்த்த போது அத்தனையும் போலியான தங்க காயின்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்த அயூப்கான் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டம் மாச்செல்லா கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (23) என்பதும், அந்த பகுதியில் இவரை போன்று பலரும் தங்க காயின் மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து விஜயகுமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.