முதியோர் இல்லம் கட்ட கொள்ளையடித்தேன்: சென்னையில் பிடிபட்ட கொள்ளையன் வாக்குமூலம்
சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கைவரிசை காட்டிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கடந்த 2 மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கொள்ளையன் குறித்து தகவல் கிடைத்துள்ளது. திருவேற்காடு பகுதியில் வைத்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர் அரும்பாக்கத்தை சேர்ந்த சேகர் (52) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறையினரின் விசாரனையில் கொள்ளை குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
முதியோர் இல்லம் கட்டுவதற்காக கொள்ளை
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சேகருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் இவரது குடும்பத்தினர் இவரை பிரிந்து சென்றுவிட்டனர். குடியின் காரணமாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறைக்கு சென்றுள்ளார். இதன் பின்னர் வெளியே வந்தவர் எம்.ஏ.சைக்காலஜி படித்துள்ளார். சென்னையில் சொந்தமாக போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது தாயின் பேரில் முதியோர் இல்லம் ஒன்றை தொடக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு ஆகும் செலவிற்கான பணத்தை கொள்ளையடிப்பது என முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் சென்னை நெளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்துள்ளார். 6 வீடுகளில் கைவரிசையை காட்டிய சேகர் சுமார் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த நகைகளை பணமாக்கி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இடம் வாங்கியுள்ளார். அங்கு தனது திட்டப்படி முதியோர் இல்லத்தை தொடங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் திருவேற்காடு பகுதியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சேகரிடம் இருந்து 50 சவரன் நகைகள் மட்டும் கைப்பற்றி உள்ளதால் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
( தகவல்கள் : சுப்ரமணி - செய்தியாளர்)