\
டிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது

டிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது

டிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது
Published on

டிக்டாக் வீடியோ பதிவுகள் அதிகம் போட்டு வந்ததால் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். செண்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் நந்தினி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு காவ்யா என்ற 11 வயது மகளும், அஷ்வின் என்ற 5 வயது மகனும் உள்ளனர். 

கருத்து வேறுபாடு காரணமாக கனகராஜும் நந்தினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே நந்தினி, தனியார் பொறியியல் கல்லூரியில் கூலி வேலை செய்து வந்தார். 

நந்தினி டிக்டாக் வீடியோ எடுப்பதில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்துள்ளார். மேலும் செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கனகராஜுக்கும் நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் இன்று மதியம் கனகராஜ், நந்தினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரம் செல்போன் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு நேரில் சென்ற கனகராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த நந்தினியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com