ஃபேஸ்புக் நண்பர்கள் பாலியல் தொல்லை ! தற்கொலை செய்துக்கொண்ட மனைவி: புகார் கொடுத்த கணவன்
ஃபேஸ்புக்கில் அறிமுகமான நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வசித்து வந்த பெண் ஒருவர், கடந்த 30 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய முயன்றபோது, அவரின் கணவருக்கு அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தி வந்த அந்த பெண்ணுக்கு, ஃபேஸ்புக் மூலம் வாசிம் அக்ரம், முகமது, பர்ஜீஸ் என்பவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.
ஆன்லைனிலேயே நண்பர்களாக பழகியதால், நட்பு ரீதியில் அவர்களை நேரில் சந்தித்த அந்த பெண், புகைப்படமும் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனை வைத்து தனது மனைவியிடம் பணம் பறித்த மூவரும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவர் குற்றம்சாட்டியள்ளார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போனில் உள்ள தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மூவரின் ஃபேஸ்புக் ஐடிக்களை வைத்து, அவர்கள் யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் அகலாத நிலையில், அதேபோன்றதொரு சம்பவம் சென்னையில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.