குழந்தை இல்லை என மனைவியை எரித்துக்கொன்ற கணவன் கைது
குழந்தை இல்லாத காரணத்தால், மனைவியை கொலை செய்த கணவரை புதுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை விராலிமலை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கடந்த 17ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கண்டெடுக்கப்பட்ட சடலம் பானுரேகா என்ற இளம்பெண் என்பதை கண்டுபிடித்தனர். பானுரேகா உயிரிழப்பு குறித்து அவரது தந்தை விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார், பானுரேகாவின் கணவர் ராஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பானுரேகாவை கொலை செய்ததாக ராஜ்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில், குழந்தை பிறக்கவில்லை என்று கூறி மனைவியை கொலை செய்தேன்.
குழந்தை வரம் வேண்டி சமயபுரம் கோவிலுக்குச் செல்லலாம் என மனைவியை பைக்கில் அழைத்துச்சென்றேன். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லலாம் எனக்கூறி, விராலிமலை அருகே பானுரேகாவை கொலை செய்தேன். அங்கேயே உடலுக்கு தீவைத்து விட்டு திரும்பி வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை வருகின்றனர்.