வேலை பார்க்கும் ஊரில் மனைவி, 5வயது மகள்; சொந்த ஊரில் வேறு பெண்ணுடன் திருமணம் - இளைஞர் கைது !
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வீரச்சிபாளையத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் துணைமேலாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அங்கு அதேப் பகுதியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணை தனது சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார். அந்தத் திருமணத்தின் மூலம் அவர்களுக்கு ஐந்து வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்த சிவனேசன் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிவனேசனின் பெற்றோர் தங்கள் கிராமத்தின் அருகேயுள்ள குலமங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த பிருந்தாதேவி (28) என்ற பெண்ணை கடந்த நான்கு மாதத்திற்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமான நாளிலிருந்து ஒரு வாரம் மனைவியுடன் இருந்த சிவனேசன், பின் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அன்றிலிருந்து தன் சொந்த ஊராகிய சேந்தன்குடிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பிருந்தாதேவி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது வருகிறீர்கள், தன்னை எப்போது அழைத்துச் செல்வீர்கள் என கணவர் சிவனேசனிடம் கேட்டுள்ளார். அதற்கு, விரைவில் அழைத்துச்செல்வதாகக் கூறி பல காரணங்களை கூறியுள்ளார்.
சில நாட்கள் கழித்து பிருந்தாவை தொலைபேசியில் அழைத்த சிவனேசன், கல்லூரியில் சேர்ந்து படிக்கும்படியும், ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பிருந்தாதேவி, சிவனேசன் வேலைபார்க்கும் நிறுவனத்திற்கே நேரில் சென்றுள்ளார். நிறுவனத்தில் சிவனேசன் குறித்து விசாரித்த பிருந்தா, அவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் வேறொரு பெண் 5 வயது மகளுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது தான் தன் கணவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளது என்றும், அவருக்கு 5 வயது மகள் இருப்பதும் பிருந்தாவுக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிருந்தாதேவி கொடுத்த புகாரின் பேரில் சிவனேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக சிவனேசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.