“உங்கள் சொத்தே வேண்டாம் என்றோம்; ஆனாலும் காதல் மனைவியை கடத்திவிட்டனர்” - கணவர் வழக்கு

“உங்கள் சொத்தே வேண்டாம் என்றோம்; ஆனாலும் காதல் மனைவியை கடத்திவிட்டனர்” - கணவர் வழக்கு

“உங்கள் சொத்தே வேண்டாம் என்றோம்; ஆனாலும் காதல் மனைவியை கடத்திவிட்டனர்” - கணவர் வழக்கு
Published on

காதல் மனைவியை அவரது பெற்றோரே கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி, அந்தப்பெண்ணின் கணவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.

மதுரை திருமோகூரைச் சேர்ந்த மணிராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நானும் இலங்கிப்பட்டியைச் சேர்ந்த கோபிகா என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கோபிகாவின் பெற்றோர் எங்களது காதலை ஏற்கவில்லை. அதோடு கோபிகாவுக்கு விருப்பமின்றி வேறு ஒருவருடன் திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் பிப்ரவரி 8-ஆம் தேதி கோபிகா வீட்டைவிட்டு வெளியேறி என்னுடன் வந்து விட்டார். பணம் நகை போன்ற எதையும் எடுத்து வரவில்லை. பிப்ரவரி 8ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். கோபிகாவின் பெற்றோருக்கு அஞ்சி பாதுகாப்பு கருதி, நானும் எனது மனைவியும் மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தோம். 11ம் தேதி ஹோட்டலுக்கு வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் இருவர், எங்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதோடு, அவரது தந்தையுடன் செல்லுமாறு எனது மனைவியை கட்டாயப்படுத்தினர்.

எனது மனைவியின் தந்தை சற்று அதிகார பலம் உடையவர் என்பதால் காவல்துறையினரும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர். இருப்பினும் எனது மனைவி அவரது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. அதை தொடர்ந்து காவல்துறையினர் சொத்தில் எனக்கு எந்த பங்கும் வேண்டாம் என்றும், தன் பெயரில் உள்ள சொத்துக்களை தனது தந்தை பெயருக்கு மாற்றி தந்துவிட்டு என்னுடன் செல்லுமாறும் தெரிவித்தனர். அதை ஏற்ற நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி சிட்டம்பட்டி பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றபோது கோபிகாவின் தந்தையுடன் வந்த 20 பேர் என்னையும் எனது உறவினர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக வந்த பெண் காவலர் உள்ளிட்டோரையும் தாக்கிவிட்டு வலுக்கட்டாயமாக எனது மனைவி கோபிகாவை காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

எனது மனைவியை மீட்டுத் தருமாறு காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மனைவியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அவரை உடனடியாக மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்"எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நீதிபதிகள் கல்யாணசுந்தரம் அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்,"கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com