
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மேட்டுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் - நாகேஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதம் ஆன நிலையில், நாகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நாகேஸ்வரி, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ‘நாகேஸ்வரியின் தற்கொலைக்கு அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம். வரதட்சணை கொடுமையால் தான் கர்ப்பிணி நாகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்’ எனக்கூறி அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் உயிரிழந்த நாகேஸ்வரி மற்றும் அவரது வயிற்றில் இருந்த 8 மாத சிசுவை அரவிந்த் வீட்டின் முன்பாக நாகேஸ்வரியின் உறவினர்கள் புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ‘அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் நாகேஸ்வரியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாகேஸ்வரியை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக அவரது கணவர் அரவிந்த், மாமனார் தங்கமணி, மாமியார் விஜயலட்சுமி ஆகிய மூவரை அன்னவாசல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.
//மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. அவ்வாறு எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெறுவதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்//