வேட்டைக் கும்பல் வைத்த நாட்டு வெடி குண்டு - வாய் சிதறிய பசு உயிருக்கு போராட்டம்
வனவிலங்குகளை வேட்டையாட புல்லில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில், பசுமாட்டின் வாய் சிதறி உயிருக்குப் போராடி வருகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தோலப்பள்ளி கடலைக்குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையா. இவர் தனது மாடுகளை வழக்கம்போல், மேய்ச்சலுக்காக கொண்டுச் சென்றுள்ளார். மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பசுமாட்டின் வாய் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சதை தொங்கியிருந்தது.
உடனடியாக இது குறித்து பசு மாட்டின் உரிமையாளர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாட்டின் வாய் காயமடைந்தது தெரியவந்தது.
மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை அங்கிருக்கும் வேட்டை கும்பல் பயன்படுத்துவதும், மேய்ச்சலுக்காக அங்கு வரும் ஆடுகள் மற்றும் மாடுகள் அதனை உண்ண முற்படும் போது வெடி குண்டு வெடித்து அவை பலியாகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. வேட்டை கும்பலை கண்டுபிடித்து வனத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.