ஒசூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோவில் கைது
ஓசூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சந்தபுரத்தை சேர்ந்தவர் ஷாம் சுந்தர். நிலத்தில் கேபிள் பதிக்கும் பணி ஒப்பந்ததாரரான இவருக்கு, திருமணமாகி மனைவி, மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெத்த தாசரப்பள்ளி தின்னா கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு அவ்வப்போது ஷாம் சுந்தர் வந்து சென்றுள்ளார்.
அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் தனது உறவினரின் மகளான 15 வயது சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தைகள் கூறி கோயிலுக்கு சென்று வருவோம் எனக் கூறியுள்ளார். பின்னர் சிறுமியை கடத்திச் சென்று பெங்களூரு பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சசிகலாவிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவரை கைதுசெய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஷாம் சுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.