முந்திரி ஆலை தொழிலாளி இறப்பின் விவரங்களை நாளை தெரிவிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

முந்திரி ஆலை தொழிலாளி இறப்பின் விவரங்களை நாளை தெரிவிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
முந்திரி ஆலை தொழிலாளி இறப்பின் விவரங்களை நாளை தெரிவிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நாளை தெரிவிக்கும்படி சிபிசிஐடி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி, சந்தேக மரணம் என பதிவுசெய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றியது. இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த கடலூர் எம்.பி. ரமேஷ் அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முந்திரி ஆலையில் இருந்து 7 கிலோ முந்திரியை திருடியதாக கோவிந்தராஜ் தாக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் எம்.பி. ரமேஷ் இருந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழக்கின் புலன் முடிவடையாததாலும், மனுதாரர் செல்வாக்கான நபர் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது, எம்.பி. ரமேஷ் தரப்பில், தொழிற்சாலையில் உள்ள 6 பேர் சேர்ந்து தாக்கியதாக மட்டுமே கூறப்படுவதாகவும், தன் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது. மரணமடைந்த கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல் தரப்பில், மனுதாரருக்கு சலுகை காட்டப்படுவதாகவும், விசாரணை முறையாக நடத்தவில்லை என்பதால் சிபிஐ விசாரணை கோரியுள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க வேண்டி இருக்கிறது எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் புலன் விசாரணை குறித்த தற்போதைய நிலை, எத்தனை சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளது போன்ற விவரங்களை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com