பெண் துறவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்: 6 பேர் மீது வழக்கு
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பெண் துறவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரம தலைமை சாமியார் மற்றும் 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாண்ட் குதிர் ஆசிரமத்தை சச்சிதானந்த் என்ற தயானந்த் சாமியார் நடத்தி வருகிறார். இவருடைய சீடர்களாக பிரேம் சேடானந்த், விஷ்வாஸ், வைராக்கியானந்த் மற்றும் இரு பெண்கள் ஆசிரமத்தில் இருந்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த இரு பெண்கள் துறவிகளாக இந்த ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர். இந்த பெண் துறவிகள் இருவரையும், ஆசிரம தலைமை சாமியார் தயானந்த் மற்றும் மற்ற சீடர்கள் மூவரும், இரு பெண்களின் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் துறவிகள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 6 பேரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா கூறினார்.