‘என்னையே மிரட்டுறீங்களா’ - தலைமை ஆசிரியரை கொன்ற மாணவன்!
பள்ளித் தலைமை ஆசிரியரை கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹரியானாவின் யமுனா நகரில் சுவாமி விவேகானந்தா பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ரித்து சாஹப்ரா (47 வயது பெண்). இதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் கேசவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயது நிரம்பிய மாணவர், படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் அந்த மாணவர் குறித்து பிற ஆசிரியர்கள் மூலம், தொடர்ந்து தலைமை ஆசிரியரிடம் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதனால் மாணவரை அழைத்து, ரித்து கண்டித்துள்ளார்.
ஆனால் மாணவரின் போக்கில் மாற்றம் இல்லை. அவர்மீதான புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தலைமை ஆசிரியர் மாணவரை அழைத்து அடிக்கடி கண்டிக்க ஆரம்பித்துள்ளார். அத்துடன் பெற்றோரிடம் கூறப்போவதாகவும், அவர்களை அழைத்து வருமாறும் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் கண்டிப்பால், அவர்மீது மாணவர் ஆத்திரமடைந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரித்துவை கொன்றுவிடலாம் என்ற மனநிலைக்கு மாணவர் வந்துள்ளார். அதற்காக திட்டம் தீட்டிய மாணவர், தனது தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை வீட்டில் இருந்து ரகசியமாக எடுத்துச் சென்றுள்ளார்.
கோபத்துடன் நேராக தலைமை ஆசிரியரை பார்க்கச் சென்றுள்ளார். மாணவரை பார்த்தவுடன், ‘என்னடா வேணும். ஏன் ஒரு மாதிரி இருக்க. என்னடா? முறைக்குற’ என ரித்து அதட்டியுள்ளார். அப்போது ஆவேசமடைந்த மாணவர், ‘என்னையே மிரட்டுறீங்களா. நான் மட்டும் தான் தப்பு பண்றேனா? என்னையே எப்ப பார்த்தாலும் திட்டுறீங்கனு’ கத்தியுள்ளார். அடுத்து சில வினாடிகளில் தான் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியை எடுத்து, தலைமை ஆசிரியர் ரித்துவை சுட்டுள்ளார். நான்கு குண்டுகள் அவர் உடலில் பாய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சத்தத்தால் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, தலைமை ஆசிரியரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பதுங்கியிருந்த மாணவரை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.