போலி ஆவணம் மூலம் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள தாத்தாவின் நிலத்தை அபகரித்த பேரன்கள் கைது!
போலி ஆவணம் மூலம் சுமார் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள தாத்தாவின் நிலத்தை அபகரித்த பேரன்கள் இருவர் உட்பட மூன்று பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆவடி திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சாணன் என்கிற நம்பிக்கைநாதன் (60). கடந்த 1998ம் ஆண்டு சுந்தர்ராஜ் என்பவரிடம் இருந்து அதே பகுதியில் உள்ள 93 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தில் 85 சென்ட் இடத்தை நம்பிக்கை நாதனின் மகன் முத்துக்கு சொந்தமான பூர்விக இடம் என்று முத்துவின் மகன்கள் வெங்கடேசன், நாகேந்திரன், முருகன் ஆகிய மூவரும் போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.
அதனை ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பாகப்பிரிவினைப் பத்திரமாக பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தெரியவந்ததும் நம்பிக்கைநாதன் அதிர்ச்சியடைந்தார். தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பாகப்பிரிவினை பத்திரம் தயார் செய்து பேரன்கள் மூவரும் சொத்தை அபகரித்து விட்டதாக நம்பிக்கை நாதன் போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமாரிடம் புகார் மனு அளித்தார்.
அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவுக்கு கமிஷ்னர் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். தனது தாத்தா சாணன் என்ற பெயரை நம்பிக்கைநாதன் என்கிற சாணன் எனவும், அவரது மகனான முத்து மற்றும் மனைவி மேனகா ஆகியோர்கள் பூர்விகமாக அனுபவித்து வந்ததாகவும் முருகன் உள்ளிட்ட 3 பேரும் போலி ஆவணம் தயாரித்து சொத்தை அபகரித்தது உண்மை என தெரியவந்தது.
அதனையடுத்து வெங்கடேசன் (37), முருகன் மற்றும் போலி ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட திருநின்றவூரைச் சேர்ந்த புண்ணியக்கோட்டி (46) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் மூவரும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.