சக ஊழியரின் பணி ஓய்வு பார்ட்டியில் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

சக ஊழியரின் பணி ஓய்வு பார்ட்டியில் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

சக ஊழியரின் பணி ஓய்வு பார்ட்டியில் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளின் புகாரால் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அரசு பேருந்தொன்று, நேற்று இரவு 8 மணி அளவில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் சுமார் 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்தை கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த ராபின் சிங் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்து நாகர்கோவிலில் கிளம்பியதிலிருந்து சரியான திசையில் செல்லாமல் அங்கும் இங்குமாக தடுமாறிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதில் இருந்த பயணிகள் ஓட்டுனர் மது அருந்தி உள்ளாரோ என அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பின்பு நெல்லை மாவட்டம் காவல் கிணறு சோதனை சாவடி வரும்போது பயணிகள் கூச்சலிட்டு பேருந்தை ஓட்டுநரிடம் நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஓட்டுநரும் சோதனைச் சாவடிக்கு முன்பாக பேருந்தை நிறுத்தி உள்ளார். தொடர்ந்து பயணிகள் சோதனை சாவடியில் இருந்த காவலர்களிடம் ஓட்டுநர் மதுபோதையில் பேருந்தை ஓட்டி வந்ததாக புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து தகவலறிந்து பணகுடி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது காவல் ஆய்வாளரிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் `இன்று சக ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்றார். அதற்காக பார்ட்டி வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு மது அருந்தினேன்’ என ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் வேறு பேருந்துகளில் மாற்றி விடப்பட்டனர்.

பின்பு ஓட்டுநரிடம் இருந்து பேருந்தை பறிமுதல் செய்து அதை பணகுடி காவல் நிலையம் கொண்டு வந்தனர் காவல்துறையினர். தொடர்ந்து ஓட்டுநர் ராபின்சனிடம் மது அருந்தியதற்கான மருத்துவ சோதனை நடத்த உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் மது போதையில் பேருந்துகளை இயக்கி, பயணிகளின் உயிர்களுக்கு உலை வைக்கும் இது போன்ற ஆபத்தான ஓட்டுநர்கள் மீது, பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com