ரயிலின் ஏசி பெட்டியில் கொள்ளையர்கள்: தங்கம், வைரம் அபேஸ்..!
செகந்திராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் இராமச்சந்திரா சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ஜீவா. மனைவி கவிதா, மகள் வன்சிதா, மகன், வருண் என குடும்பமாக வசித்து வருகிறார். செகந்திராபாத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்தோடு சென்ற ஜீவா வீட்டில் இருந்த நகைகளையும் எடுத்துச் சென்றிருக்கிறார். திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கடந்த 2-ம் தேதி இரவு செகந்திராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பியிருக்கின்றனர் ஜீவாவின் குடும்பத்தினர். அதிகாலை நேரம் என்பதால் ரயிலில் அனைவரும் சிறிது நேரம் கண் அசந்திருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜீவா மனைவி வைத்திருந்த நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். ரயில் ஆந்திரா மாநிலம் கூடூர் அருகே வந்தபோது எழுந்துக்கொண்ட கவிதா தனது பேக்கில் எல்லா நகைகளும் இருக்கிறதா..? என சோதனை செய்து பார்த்திருக்கிறார். கவிதாவுக்கு காத்திருந்தது என்னவோ அதிர்ச்சிதான். ஆம் ஹாண்ட் பேக்கில் தான் கொண்டுவந்த எந்த நகைகளும் இல்லை. தனது 37 சவரன் நகைகள் மற்றும் வைர கல் ஆகியவற்றை வைத்திருந்த நிலையில் கொள்ளையர்கள் மொத்தமாக தூக்கிச் சென்று ஓடியது கவிதாக்கு தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கவிதா விசாரித்து பார்த்திருக்கிறார். ஆனால் நகை கிடைக்கவில்லை. இதனையடுத்து நகை காணாமல் போனது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் ஜீவாவின் குடும்பத்தினர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜீவா குடும்பத்தினர் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஒன்றும் செல்லவில்லை. அதிக தொகை கொடுத்து இரண்டாவது ஏசி வகுப்பில் முன்பதிவு செய்து பயணித்த நிலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதனிடையே ரயில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் விரைவில் காணாமல் போன நகையை தேடி கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் ஜீவா குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.