’போட்டோவை சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணிடுவேன்’ - சிறுமியை மிரட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்
மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துடன் சிறுமியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதாக பணம்கேட்டு மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை அருகே கிளியனூர் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த பாலையா என்பவரின் மகன் லோகேஷ் என்ற பாலமுருகன் (22). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகக் கூறி பழகியுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியை போட்டோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று பணம்கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.