பிரின்சிபல் மகன் பாலியல் தொல்லை: தீக்குளித்தார் மாணவி
தனியார் பள்ளி பிரின்சிலின் மகன் பாலியல் தொல்லைக் கொடுத்ததால், 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 12-ம் வகுப்பு படித்தவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த சனிக்கிழமை, பிரின்சிபல் அழைப்பதாகக் கூறியுள்ளனர். சென்றார் கீதா. அங்கு போனால், பிரின்சிபல் இல்லை. அவர் மகன் நின்றுகொண்டிருந்தார். அவர் கீதாவுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். பிறகு, இங்கே நடந்ததை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளார். அழுதுகொண்டே கீதா வெளியேறியுள்ளார்.
இதை ஜன்னல் வழியாகப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், கீதாவின் சகோதரரிடம் கூறியுள்ளார். அவர், வேகமாக பள்ளிக்கு வந்து பிரின்சிபல் மகனை தாக்கியுள்ளார். இதையடுத்து பிரின்சிபல் மகன் தனது நண்பர்களுடன் கீதாவின் வீட்டுக்குச் சென்று, அவரை தாக்கினாராம். இதனால் வெறுத்துப் போன கீதா, அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தீக்குளித்தார். கதவை உடைத்து தீயை அக்கம் பக்கத்தினர் அணைத்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
கீதாவின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் பிரின்சிபல் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.