ஃபேஸ்புக்கில் ஆசை வார்த்தை ! சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை அரும்பாக்கத்தில் ஃபேஸ்புக் மூலம் 10ஆம் வகுப்பு மாணவியிடம் 15 சவரன் நகைகளை ஏமாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் சூளைமேடு பத்மநாப நகரைச் சேர்ந்த ராகுல்குமார் என்ற கல்லூரி மாணவர் அறிமுகமாகியுள்ளார். ஆசை வார்த்தை பேசி சிறுமியை தன் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் கல்லூரி மாணவர். கல்லூரி படிக்கும் போதே சுயதொழில் தொடங்கவுள்ளதாக சிறுமியிடம் கூறிய ராகுல், அதற்காக அவரிடமிருந்து 15 சவரன் நகையையும் வாங்கியுள்ளார். அதன்பிறகு, தன்னை தவிர்த்து வந்த ராகுல் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கல்லூரி மாணவர் ராகுல்குமாரையை பிடித்து அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அவரின் செல்போனை ஆராய்ந்ததில் பல பெண்களிடம் இதே போல் ராகுல்குமார் பழகி பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது. அதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.சிலநாட்கள் தாமதத்துக்கு பிறகு கல்லூரி மாணவரை விசாரித்த அண்ணாநகர் காவல்துறையினர், இருதரப்பையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிறுமியிடமிருந்து ஏமாற்றிப் பறித்த நகைகளை ஒப்படைப்பதாக கல்லூரி மாணவர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதனையடுத்து மாணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து காவல்துறையும், ஊடகங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இளம்பெண்கள் மட்டுமின்றி பள்ளிச் சிறுமிகள் கூட ஏமாற்றப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் விரிக்கப்படும் சதி வலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.