சூர்யா பட பாணியில் கொள்ளையடித்த கும்பல் - 8 நாட்களில் தேடிபிடித்த போலீஸ் படை

சூர்யா பட பாணியில் கொள்ளையடித்த கும்பல் - 8 நாட்களில் தேடிபிடித்த போலீஸ் படை
சூர்யா பட பாணியில் கொள்ளையடித்த கும்பல் - 8 நாட்களில் தேடிபிடித்த போலீஸ் படை

திருவள்ளூரில் வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து கொள்ளையடித்த 12 பேர் கைது செய்யபபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 44 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 கார்களும் பறிமுதல் செய்யபபட்டன.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளக்குளம் கிராமத்தில் உள்ள அதிமுக பிரமுகரும், அரசு ஒப்பந்ததாரருமான பாலமுருகன் என்பவரது வீட்டில் கடந்த 1ஆம் தேதி அதிகாலையில் புகுந்த ஒரு பெண் உட்பட 7 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி, 117 சவரன் தங்கம், ரூ.2.5 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பூந்தமல்லி சரகம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையின்போது, சம்பவ இடத்தில் குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்கள் மற்றும் டவர்டம்ப் மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக, பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் கோவை சென்று, வழக்கில் தொடர்புடைய டேனியல், நந்தகுமார், சிவமுருகன், பிரகாஷ், வினோத், கவிதா, ரென்னிஸ், அஸ்கர் அலி& சாரதி (அ) பார்த்தசாரதி ஆகிய 9 பேரை கைதுசெய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில், வசந்த், செந்தில்வேலன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் ரைஸ் புல்லிங் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த வசந்த் மற்றும் செந்தில்வேலன், அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 3 பேரும், பாலமுருகன் என்பவர் அந்த ஊரில் வசதியானவர் எனத் தெரிந்துகொண்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், வெங்கடேசன் இந்த திட்டத்தை செயல்படுத்த, கோயம்புத்தூரை சேர்ந்த பார்த்தசாரதி, அஸ்கர் அலி மற்றும் ரென்னிஸ் ஆகியோரை தொடர்புகொண்டு திட்டம் தீட்டி, கொள்ளையடிக்கும் பணத்தை சமமாக பிரிந்துக்கொண்டு பெங்களூருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதில் அவர்களது கூட்டாளிகளான பார்த்தசாரதி மற்றும் டேனியல் இருவரையும் சேர்த்துக்கொண்டு, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அன்று பூந்தமல்லி மற்றும் அண்ணாநகரில் முகாமிட்டு பாலமுருகனின் வீட்டை நோட்டம் பார்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி அதிகாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் பாலமுருகனின் வீட்டுக்குச் சென்ற ஒரு பெண் உட்பட 7 பேர், 44 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றதும், ஒப்பந்தத்தின்படி வெங்கட் கூட்டாளிகளும், டேனியலின் கூட்டாளிகளும் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை சமமாக பங்கிட்டுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உண்மையாக கொள்ளையடிக்கப்பட்டது 44 சவரன் நகை மற்றும் மற்றும் 1 லட்சம் ரொக்கம் மட்டுமே என விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றார்கள். சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைதுசெய்து கொள்ளைப்போன சொத்துக்களை மீட்டெடுத்த தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாகப் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com