கல்லைகட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள் - 4 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் சடலம் மீட்பு
4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி ரோமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கீர்த்தி(21) என்ற இளைஞரை கடந்த 24ஆம் தேதி காணவில்லை என உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்திருந்துள்ளார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட உத்தமபாளையம் காவல்துறையினர், அவரது நெருங்கிய நண்பர்கள் 4 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியாக்கி உள்ளது. விசாரணையில், நண்பர்களுக்குள் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கீர்த்தி என்ற இளைஞரை கொலை செய்து, அவரது உடலில் கல்லை கட்டி மாதா கோவில் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் வீசியதாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த கிணறு பகுதிக்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியோடு, அழுகிய நிலையில் உடலை கைப்பற்றினர். பின்னர் மோப்ப நாய் வரவழைத்து தீவிர விசாரணை செய்து பிரேதத்தை பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த இளைஞரின் நண்பர்களிடம் கொலைக்காண காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.