தருமபுரி: வீட்டிலேயே கரு பரிசோதனை மையம், பெண் சிசுக்கொலைகள்.. மோசடி கும்பல் கைது!

மொரப்பூர் அருகே சட்ட விரோதமாக கரு பரிசோதனை மையம் நடத்தி கருக்கலைப்பு செய்து வந்ததை மருத்துவத் துறையினர் கண்டுபிடித்தனர்.
தருமபுரி: வீட்டிலேயே கரு பரிசோதனை மையம், பெண் சிசுக்கொலைகள்.. மோசடி கும்பல் கைது!

தருமபுரியில் மொரப்பூர் பகுதி அருகே சட்டவிரோதமாக கருவின் பாலினம் கண்டறியும் பரிசோதனை மையம் நடத்தி, சட்டவிரோதமாக கருக்கலைப்பும் செய்து வந்தவர்களை மருத்துவத்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தைகளை சிசுவிலேயே கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் வந்த நிலையில், போலியாக மருத்துவம் பார்க்கும் நபர்களையும் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அதிகாரிகளுக்கு சமீபத்தில் கடுமையாக உத்தரவிட்டிருந்தார். இவ்விவகாரத்தில் கயவர்களை அடையாளம் காட்ட மக்களும் ஒத்துழைப்பு வழங்க அதிகாரிகள் கோரியிருந்தனர்.

அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்திக்கு, மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் தனது மருத்துவ ஊழியர்களுடன் அரசு வாகனத்தை பயன்படுத்தாமல் தனியார் வாகனத்தில் புகாருக்குள்ளான இடத்திற்கு திடீரென நேரில் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது வகுத்தானூர் கிராமத்தில் சாக்கம்மாள் (52) என்பவருடன் இணைந்து கள்ளக்குறிச்சி பகுதியைச் சார்ந்த கவியரசன் (28), அய்யப்பன் (34), மனோஜ்குமார் ஆகியோர் வீட்டிலேயே கரு பரிசோதனை மையத்தை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மையத்தின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதனை செய்து வந்துள்ளனர் அந்த நால்வரும். பின் பெண் சிசுக்கொலைகளையும் செய்து வந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ அதிகாரிகள், அங்கே ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை அவர்கள் சோதிப்பதை நேரில் பார்த்துள்ளார்கள். அதிகாரிகள் வந்ததை அறிந்த வீட்டின் உரிமையாளர் சாக்கம்மாள், கதவை மூடிக் கொண்டு திறக்காமால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மொரப்பூர் காவல்துறையினரின் உதவியோடு வீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்தியுள்ளனர் மருத்துவக்குழுவினர்.

அப்போது சிசுவை அறியும் பரிசோதனைக்கு அவர்கள் பயன்படுத்திய 7 லட்சம் மதிப்புள்ள ஸ்கேனிங் மிஷினையும், அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் கைபற்றினர். மேலும் ஸ்கேனிங் பணியை செய்து வந்த அய்யப்பன், கவியரசன், மனோஜ்குமார், இவர்களுக்கு உடந்தையாக இருந்து வந்த சாக்கம்மாள் ஆகியோர் மீது மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என பார்ப்பதே இந்திய அரசியலைப்பு சட்டத்தில் குற்றமாக இருக்கும் நிலையில், அக்குற்றத்துடன் சேர்த்து பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் சட்டவிரோதமாக கருக்கலைப்புக்கும் உதவியுள்ளனர். இதில் கருவின் பாலினம் அறியும் பரிசோதனை செய்வதற்கு மட்டும் இவர்கள் ரூ.25,000 முதல் ரூ.30,000 முறை வாங்கி கட்டணம் வசூல் செய்துள்ளனர் இக்கும்பலை சேர்ந்தோர். பரிசோதனை செய்தவுடன் கருக்கலைப்பு செய்வதற்கு வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்து வருகின்றனர். அதற்கும் கமிஷன் பெற்று வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனை நீண்ட காலமாக இந்த கும்பல் செய்து வந்துள்ளது.

மாவட்டத்திற்கு ஒருவர் என தேர்ந்தெடுத்து வீட்டிற்குள்ளேயே இவர்கள் பல ஆண்டுகளாக இச்சோதனை செய்து வந்தது தற்பொழுது மருத்துவ துறையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவிலேயே இதுவரை எவ்வளவு பெண்களுக்கு கரு பரிசோதனை செய்துள்ளார்கள், இதில் எத்தனை கருவை கலைத்துள்ளார்கள் என்பது தெரியவரும் என மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com