மதுரை: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 17வயது சிறுவன்- நால்வர் கைது.!
மதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரிமேடு காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தியதில் அந்த பகுதியை சேர்ந்த மதன், மாரிமுத்து, பிரகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, நான்கு பேரையும் கைதுசெய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் மீது மதுரையில் பல்வேறு காவல்நிலையங்களில் ஏற்கனவே வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது, அதனை தொடர்ந்து அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்,
மேலும், துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த கரிமேடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி மற்றும் உதவி ஆணையர் சக்கரவர்த்தியை மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார் வெகுவாக பாராட்டினார்.