திருப்பூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை! பல்லடம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்கிணறு கிராமத்தில் மதுபோதையில் இருந்த வெங்கடேசன் என்பவர், அவரது கூட்டாளிகள் இரண்டு பேருடன் சேர்ந்து அக்கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய நான்கு பேரை வெட்டி கொலை செய்துள்ளார். தனது தோட்டத்தில் மது அருந்திய வெங்கடேசனை செந்தில்குமார் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், மதுபோதையில் இருந்த மற்ற இருவருடன் சேர்ந்து கொலை செய்துள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி நேரில் விசாரணை மேற்கொண்டார். தற்போது நான்கு பேரின் உடல்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் உள்ள குளிரூட்டும் பெட்டி பழுதடைந்து ஏழு மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாததால் நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்படவில்லை. இதையடுத்து தனியாரிடம் இருந்து குளிரூட்டும் பெட்டி வாங்கப்பட்டு அதில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்று உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்லடம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்லடம் நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று கொலையாளிகளையும் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி பாஜக மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்டோர் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com