கிருஷ்ணகிரி: வீட்டுக்குள் தங்க சிலையை தோண்டி எடுப்பதாகக் கூறி மோசடி - 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டுக்குள் புதைந்துள்ள தங்கச்சிலையை தோண்டி எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தளி அருகே திப்பென அக்ரஹாரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சாந்தாம்மா. இவரது வீட்டில் பிரச்னைகளை சரிசெய்ய பூஜை செய்வதாகக் கூறி, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் அங்கு சென்றுள்ளனர். வீட்டுக்குள்ளே தங்கச்சிலை இருப்பதாகவும் அதை தோண்டி எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறி, 55 ஆயிரம் ரூபாயை வசூலித்த அந்தக் கும்பல், பூஜைகள் செய்து தோண்டத் தொடங்கியுள்ளது. பாதி தோண்டிய பின் மேலும் 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது.
இதனிடையே வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், அக்கம்பக்கத்தினர் தளி காவல்துறையினரை வரவழைத்தனர். விசாரணையில் அவர்கள் மோசடி கும்பல் என்பது உறுதியானதால், 5 பேரையும் கைது செய்தனர்.