பெண் காவலர் கொடுத்த பாலியல் புகார்: நீலகிரி கூடுதல் எஸ்.பி சஸ்பெண்ட்
பெண் காவலர் கொடுத்த பாலியல் புகாரில் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.,யாக இருக்கும் சார்லசை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர் இதற்கு முன் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றினார். அப்போது அங்கு பணியாற்றும் பெண் போலீசாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடந்த விசாரணையில் தவறுக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.,யாக இருக்கும் சார்லசை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார்.
இந்த சஸ்பெண்ட் உத்தரவு கோவை சரக டி.ஐ.ஜி வாயிலாக, நீலகிரி மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலேயே கூடுதல் எஸ்.பி., சார்லஸ் தங்கியிருக்க வேண்டும் என்றும், அரசு அனுமதியில்லாமல் வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.