230 சவரன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை?: இளம்பெண் மரணத்தில் தொடரும் மர்மம்
சிவகாசியில் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கவிநிலா என்ற பெண்ணுக்கும், சிவகாசியை சேர்ந்த துளசி ராம் என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். திருமணத்தின்போது பெண் வீட்டார் 230 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. சீமந்தம் உள்ளிட்ட நிகழ்வின்போது மேலும் 45 சவரன் நகையை கொடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் துளசிராம், மனைவி கவிநிலாவை வரதட்சணைக் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அப்பெண், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதனைத்தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் வரதட்சணையாக மேலும் 45 லட்ச ரூபாயை சில மாதங்களுக்குள் தருவதாக கூறி மகளை அவரது கணவர் வீட்டில் விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கவிநிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணின் பெற்றோர் சென்று பார்த்தபோது, வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் கவிநிலாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவர் கழுத்தில் காயமோ, வீட்டில் தூக்கிட்டு இறந்ததற்கான தடயமோ இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர் வரதட்சணைக் கேட்டு தனது மகளை, அவரது கணவர் குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சிவகாசி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெண்ணின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.