18 ஏக்கர் நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் - விரக்தியில் விபரீத முடிவு எடுத்த கணவன்- மனைவி

18 ஏக்கர் நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் - விரக்தியில் விபரீத முடிவு எடுத்த கணவன்- மனைவி

18 ஏக்கர் நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் - விரக்தியில் விபரீத முடிவு எடுத்த கணவன்- மனைவி
Published on

பொள்ளாச்சி அருகே 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்றுத் தருவதாகக்கூறி விவசாயி ஒருவரை பாஜக பிரமுகர் ஏமாற்றிவிட்டதாக அவர் தனது மனைவியுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். 

பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு அதே பகுதியில் 18 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான அந்த 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் தம்பு என்கிற நந்தகோபால் (பாஜக பிரமுகர்) என்பவருடன் விலை பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் நிலத்தை விற்பனை செய்வதற்கு அதில் வில்லங்கம் உள்ளதா என பார்ப்பதற்கு வழக்கறிஞரிடம் அசல் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, தம்பு என்கிற நந்தகோபால் அசல் பத்திரங்களை பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாகியும் இடத்தை கிரையம் செய்யாமல் அவர் இழுத்தடித்து வந்ததால், நேற்று விவசாயி கனகராஜ், அவரது மனைவி சுமதி மற்றும் மகன் கிருத்திக்குடன் நந்தகோபால் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் பத்திரத்தை திருப்பிதர மறுத்ததால், கனகராஜ் மனைவி சுமதி பூச்சிமருந்து குடித்துள்ளார். இதைக் கண்ட கனகராஜும், பூச்சி மருந்தை குடித்து உள்ளார். மயக்கம் அடைந்த இருவரையும் அவரது மகன் கிருத்திக் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோலார்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு செல்வதற்கு முன்பே சுமதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கனகராஜ் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, கனகராஜின் மகன் கிருத்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த சுமதியின் உடலை வாங்க மறுத்து, இன்று அவரது உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இடத்தை விற்று தருவதாகக்கூறி ஏமாற்றிய நந்தகோபால், தொடர்ந்து கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும், தனக்கும் தன் தம்பிக்கும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்டு தற்கொலைக்கு தூண்டிய தம்பு என்கிற நந்தகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயின் மகன் கிருத்திக் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com