மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெயரில் போலி இணையதளம்: கால் சென்டர் நடத்திய 3 பேர் கைது

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெயரில் போலி இணையதளம்: கால் சென்டர் நடத்திய 3 பேர் கைது
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெயரில் போலி இணையதளம்: கால் சென்டர் நடத்திய 3 பேர் கைது

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி கால் சென்டர் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கணினி பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் லைசென்ஸ் பெறுவதற்கு சுமார் 9 ஆயிரம் ரூபாயை செலுத்தி ஆன்லைன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், மைக்ரோசாஃப்ட் மென்பொருளை வாங்காமல் குறைந்த விலைக்கு கிடைக்கும் பைரட்டேட் வெர்ஷனை பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிபிசிஐடி சைபர் செல் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் இந்த மோசடிக் கும்பலிடம் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஈமெயில் மற்றும் போலி கால் சென்டர் மூலம் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் தேவைப்படும் கணினி பயன்பாட்டாளர்களை அணுகி மோசடி செய்கின்றனர்.

குறைந்த விலைக்கு மைக்ரோசாஃப்ட் லைசன்ஸ் தருவதாகக் கூறி பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று ஆசைவார்த்தை கூறி கிரெடிட் கார்டு மூலமாக போலி மைக்ரோசாஃப்ட் மென்பொருளை மோசடிக் கும்பல் கொடுப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து எட்டு இடங்களில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அம்பத்தூரில் itrope டெக்னாலஜி என்ற கால் சென்டரில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது போல் பிம்பத்தை உருவாக்கி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தை போலியாக வைத்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி கும்பலிடம் சிக்குபவர்களின் கணினியை ரிமோட் ஆக்சஸ் கண்ட்ரோல் முறையில் இருந்த இடத்தில் இருந்தபடியே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். அதன் பின் கணினியில் பிரச்னைகளை உருவாக்கி, அதை சரி செய்து தருவது போல் சேவை அளித்து மோசடி செய்கின்றனர்.

இவ்வாறு மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்த அம்பத்தூரில் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் ராஜேஷ் ப்லோமான், விவேக் மற்றும் முகமது உமர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து முக்கிய ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல் உலக அளவில் பலரையும் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலோடு தொடர்புடைய பலரும் இந்தியா முழுவதும் போலி கால் சென்டர்களை உருவாக்கி மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பயன்பாட்டாளர்களை மோசடி செய்து வருகின்றனர். இவர்கள் பலவிதமான வைரஸ்கள் மூலம் டேட்டாக்களை திருடுவதோடு கணினியை செயல்பட விடாமல் தடுக்கின்றனர். இதனை சரிசெய்ய கால் சென்டரை அணுகுமாறு, பதிவிறக்கம் செய்யப்பட்ட போலி மைக்ரோசாஃப்ட் இணையதளம் மூலமாகவே மெயில் அனுப்புகின்றனர்.

இதைத் தொடர்ந்து பிடிபட்ட மூவரிடமும் சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் எத்தனை பேரை ஏமாற்றி உள்ளார்கள் எனவும், இவர்களோடு தொடர்புடைய மற்ற கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com