தேனியில் லட்சக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி..!
தேனியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனியில் உள்ள வங்கி ஒன்றில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் 42,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை வங்கி நிர்வாகம் கண்டுள்ளது. இது குறித்து வங்கி சார்பில் தேனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து சிசிடிவி பட காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக போடிநாயக்கனூரை சேர்ந்த கதிரேசன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் செய்து புழக்கத்தில் விட தயாராக வைத்திருந்ததும், மேலும் இதற்கு உடந்தையாக சஹாகீர், அப்பாஸ் ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து புழக்கத்தில் விட தயாராக வைக்கப்பட்டிருந்த 18.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும், கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யபட்டன.