‘ஏலச்சீட்டால் ரூ50 கோடி நஷ்டம்?’ நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை
நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆனந்த் ராஜ். தற்போது, காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான விஜயின் பிகில் படத்திலும் அவர் நடித்திருந்தார். இவரது சகோதரர் பெயர் கனகசபை. 55 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள இல்லத்தில் ஆனந்தராஜின் சகோதரர் கனகசபை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திகளின்படி, அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கனகசபை வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். அதேபோல், ஏலச்சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் கனகசபைக்கு ரூ50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெருக்கடி முற்றவே விஷம் அருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியதாக கருதப்படும் கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 50 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏலச்சீட்டு மூலம் பணம் கொடுத்தவர் தொடர்ச்சியாக தங்களது பணத்தை கேட்டு மிரட்டியதாகவும் அதனால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. கனகசபையின் கடிதத்தில் சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளதாகவும், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரபல நடிகர் ஒருவரின் சகோதரர் 50 கோடி ரூபாய் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.