நிதி நிறுவன மோசடி: ரூ. 550 கோடி வசூல் செய்து கொடுத்த முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!
சென்னை கிண்டியைச் சேர்ந்த ஐஎப்எஸ் நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக 84,000 பேரிடம் ரூ.5,900 கோடி ரூபாயை வசூலித்தது. இதுதொடர்பான புகாரில் 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையல், ரூ.1.14 கோடி ரொக்கம், 791 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.121 கோடி பணம் முடக்கப்பட்டது. அதேபோல் ரூ.39 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், வெளிநாட்டுக்கு தப்பியோடிய இயக்குனர்கள் 4 பேரில் இருவரை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதையடுத்து இதில் தொடர்புடைய நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், 2,000 நபர்களிடம் இருந்து ரூ.550 கோடி வசூல் செய்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர் ஹேமந்திர குமாரை கைது செய்துள்ள காவல் துறையினர், அவரிடம் இருந்த சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஹேமந்திர குமார், முன்னாள் காவல்துறை அதிகாரி (முதன்மை காவலராக இருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றவர்) என்பது குறிப்பிடத்தக்கது.