ஈரோடு | இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது - 9 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூரூதீன், முகமது அஸ்லாம் மற்றும் பெருந்துறையைச் சேர்ந்த சக்தி ஆகியோர் என்பதும் அவர்கள் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து மூவரையும் கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.